அதிகரிக்கும் நாய்க்கடி பிரச்னை: தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றம்
இந்தியாவில் நாய்க்கடி என்பது முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. நாய்க்கடி தொடர்பான தரவுகள், பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 11 லட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 12 பேர், ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்திருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் 19ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களின்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்தாண்டு மட்டும், 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் பலியாகியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் மட்டும் நாய்க்கடியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6 ஆயிரத்தை நெருங்குகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கடந்தாண்டு மட்டும், 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர், நாய்க்கடிக்கு ஆளாகியிருப்பதாக, மத்திய அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும், 54 பேர் ரேபிஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறது.
இப்படி நாடு முழுவதும் நிகழும் நாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனையொட்டி உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்களும், அதனால் ரேபிஸ் தொற்று ஏற்படுவதும் கவலையளிப்பதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா கூறியுள்ளார். ரேபிஸ் நோய்க்கு கைக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் பலியாவதாகவும் கவலை தெரிவித்திருக்கும் அவர், இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதற்காக இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வுக்கு மாற்றவும், உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.