பாடகர் சின்மயி ANI
தமிழ்நாடு

“உயிரோடு விட்டதற்கு நன்றி!” – பாடகி சின்மயி சரமாரிக் கேள்வி!

பாலியல் புகார் விவகாரத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், வைரமுத்து, வீரமணி வழக்குகளையும் சுட்டிக்காட்டி, ஒட்டுமொத்த அமைப்பையும் விமர்சித்துப் பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். அவரது பதிவு இணையத்தில் விவாதமாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

பாடகி சின்மயின் சமூகவலை தளப் பதிவு தற்போது விவாதமாகியிருக்கிறது. அந்தப் பதிவில், அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, ஒட்டுமொத்த அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அப்படி அவர் கோபமடைந்ததற்கான காரணம் என்ன? பார்க்கலாம்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த பாலியல் புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயியை ஒருவர் டேக் செய்திருந்தார். அந்தப் பதிவில், "எங்கம்மா இருக்குற? சீக்கிரம் வந்து நியாயத்தைச் சொல்லு" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குக் கடும் கோபத்துடன் எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள சின்மயி, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும், பாலியல் புகார்களில் செல்வாக்கு படைத்தவர்களுக்கு ஆதரவு கிடைப்பதாகவும் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

2018-ஆம் ஆண்டு #MeToo இயக்கத்தின்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, திரைத்துறையில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் நீதிமன்றப் படிகளில் ஏறியதையும் தனது பதிவில் சின்மயி நினைவுபடுத்தியுள்ளார்.

Chinmayi & Vairamuthu

"ஒருவர் தொடர் பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும், அவரைக் குற்றம் சாட்டிய ஒரே காரணத்திற்காக என்னை வேலை செய்ய விடாமல், பல வருடங்கள் நீதிமன்ற வழக்கு என்று அலையவிட்டுத் தடை செய்தார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீரமணி வழக்கையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், "வீரமணியோ, வைரமுத்துவோ.. எல்லாருக்கும் பல பேர் பல விதங்களில் துணை போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். "நான் என்ன செய்கிறேன், என்ன சொன்னேன் என்று என்னைக் கேட்ட அளவுக்கு, வீரமணியைக் காப்பாற்றிய சிஸ்டத்தை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை" எனக் கடுமையாக விமர்சித்துத் தனது கேள்விகளை அடுக்கியுள்ளார்.

Veeramani

மேலும், "இந்த உலகத்திலேயே பாலியல் குற்றவாளியைச் சுட்டிக்காட்டியவர்களைத் தடை செய்த ஒரே இடம் தமிழ்நாடுதான். சிதைத்துவிடுவேன், அழித்துவிடுவேன் என்று என்னைப் பேசிய பேச்சுக்கு, லாரி ஏற்றிக் கொலை செய்யாமல் விட்டார்களே என்று சந்தோஷப்பட வேண்டும், உயிரோடு விட்டீர்கள்... அதற்கு நன்றி! முற்போக்கு... பெண்ணியம்... மண்ணாங்கட்டி!" என எக்ஸ் தளத்தில் தனது முழு கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இது இணையதளத்தில் விவாதமாகியிருக்கிறது.