வெடிவிபத்து - இருவர் பலி pt desk
தமிழ்நாடு

தஞ்சை | நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்த குடோனில் வெடிவிபத்து - இருவர் பலி

திருவோணம் அருகே இன்று காலை அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ராஜா

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பயங்கர சத்தத்துடன் குடோனில் இருந்து வெடிகள் வெடித்த சத்தம் கேட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று பார்த்துள்ளனர். அப்போது பட்டாசு வெடித்து இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக தகவல் அறிந்து வட்டாத்திகோட்டை போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

வெடி விபத்தில் உடல் சிதறி பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), முகம்மது ரியாஸ் (18) ஆகியோர் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.