போராடிய மாணவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

PT செய்தி எதிரொலி: தேசிய தடகள போட்டியில் கலந்துகொள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி!

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்குபெற பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தடகள விளையாட்டு வீரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராடினர். இதுதொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ந.காதர்உசேன்

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் 30 தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் மாணவி மற்றும் ஒருவர் என மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக அனுமதி பெற்று இன்று மதியம் ஒரு மணிக்கு அவர்கள் தொடர்வண்டியில் செல்ல தயார் நிலையில் இருந்தனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்

இந்நிலையில், திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை போட்டிக்குச் செல்லக் கூடாது என கூறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கான காரணம் குறித்து மாணவர்கள் புதிய தலைமுறையிடம் கூறும்போது, “கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக விடுதியில் சில மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதனை காரணம்காட்டி எங்களை போட்டிக்குச் செல்லக்கூடாது என துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழகம் கூறிவிட்டது.

இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக எங்களை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனக்கூறினர்.

போராட்டத்துகுப் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க மாணவர்கள் காத்திருந்தனர். இதற்கிடையே மாணவர்களை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆலோசனையில் ஈடுபட்டுதாக தகவல் வெளியாகினது. அதேநேரம் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில், தற்போது மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் 2.30 மணி அளவில் புறப்படும் ரயிலில் செல்ல தயாராகி வருகின்றனர்.