செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன் (59). இவர், தஞ்சாவூர் வடக்கு வாசலைச் சேர்ந்த திமுக மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரான பப்பு என்ற கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரின் மதுபான கூடத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், மதுபான கூடங்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதால் போதிய வருமானம் இன்றி பத்மநாபனால் உரிய தொகையை கிருஷ்ணமூர்த்திக்கு வழங்க முடியவில்லை என்றும், இதனால் பத்மநாபன் கொடுக்க வேண்டிய தொகைக்கு கூடுதலாக வட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே பத்மநாபன் மற்றும் கிருஷ்ணமூர்த்திக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும். இதில், பத்மநாபன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு பத்மநாபன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, பத்மநாபன் மகள் ராகவி, மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார், பப்பு என்ற கிருஷ்ணமூர்த்தி, இவரது தம்பி முத்துக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேர் மீது கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர், பத்மநாபன் வீட்டிற்குச் சென்று பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.