தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி  puthiya thalaimurai
தமிழ்நாடு

“அடுத்தகட்டமாக திருச்சி மத்திய சிறையை முற்றுகையிடுவோம்” - தமிமுன் அன்சாரி

PT WEB

‘சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் மசூதி அருகே முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இப்போராட்டத்தின்போது மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசுகையில்,

"20 ஆண்டுகளை கடந்து தமிழகத்தில் ஆயுள் கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க கோரி கூடியுள்ளோம். நேற்று 5 கட்சிகள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அக்கட்சிகளுக்கு நன்றி.

அந்த கவன ஈர்ப்புக்கு, முதலமைச்சர் அளித்த பதில் ஏமாற்றம் அளிக்கிறது. ஆளுநரிடம் ஏற்கனவே 22 மசோதாக்களுக்கு பதில் வரவில்லை. ஆகவே தமிழக அரசு அமைச்சரவையைக்கூட்டி, 161 ஆவது பிரிவை கொண்டு வர வேண்டும். சாதி, மத, வழக்கு பேதம் இன்றி 20 ஆண்டுகள் கடந்த அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும்.

மாமன் மச்சான் அண்ணன் தம்பிகளாகத்தான் தலித், இஸ்லாமிய மக்கள் உள்ளோம். அண்ணாமலை பற்றி பேச விரும்பவில்லை, தமிழ்நாட்டில் அவருக்கு என்ன மதிப்பு உள்ளது என்று எல்லாருக்கும் தெரியும்.

தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 161 ஆவது சட்ட பிரிவை நிறைவேற்றிய பின், ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்துவிட்டால் அடுத்து எங்கள் போராட்டம் எல்லாம் ஆளுநர் மாளிகையை நோக்கித்தான் இருக்கும்.

தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இந்த கோரிக்கையை முன்வைத்து எந்தக்கட்சி போராட்டத்தை நடத்தினாலும் வேறுபாடின்றி உடன் நிற்போம்” என்றார்.