அமைச்சர் ஸ்ரீநாத் Pt web
தமிழ்நாடு

சிறையில் கொலையான சபரிவர்மன்.. அமைச்சர் நேரில் ஆறுதல்.. நிவாரணத்தை வாங்க மறுத்த குடும்பத்தினர்!!

நாகர்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட விசாரணை கைதி சபரிவர்மன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்க வந்த அமைச்சர்களிடம் அரசு நிவாரண உதவிகளை வாங்க குடும்பத்தினர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Premkumar S

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9-ம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின் படி, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர், உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது அவர் உடலில் 19 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் மர்ம மரணம்

இதையடுத்து, 3 ஜெயில் வார்டன்கள் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், பிரத பரிசோதனை தொடர்பான வீடியோ ஆதரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். சபரிவர்மன் மனைவிக்கு அரசு வேலை கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயிழந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தசூழலில் தான், நேற்று இரவு பாதிக்கப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் ராஜேஷ்குமார் ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, 10 லட்சம் நிவாரணத் தொகை மற்றும் சபரிவர்மன் மனைவிக்கு அரசு வேலை ஆகியவற்றை தமிழக அரசு சார்பில் வழங்க முன்வந்தனர்.

எனினும், அரசு அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொள்ள சபரிவர்மன் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், அவரது உடலை வாங்க முன்வரவில்லை எனத் தெரியவருகிறது. இதனால், அமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த 20 நிமிட சந்திப்புக்குப் பிறகு திரும்பிச் சென்றிருக்கின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் மனித உரிமை அமைப்பின் வக்கீல்கள் கூறும் போது, ”பிரேத பரிசோதனை செய்ததில் 19 இடங்களில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரேத பரிசோதனை வீடியோவை எங்களின் தரப்பு மருத்துவ குழுவிடம் வழங்கி ஆய்வு செய்வோம். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடுவோம். அதற்காக ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையில் தவறு இல்லை என்றால் உடலை வாங்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணம் தர முன் வந்ததற்கு தமிழக முதல்வர் விஜய், அமைச்சர்கள், கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.