\
puthiya thalaimurai tv journalist vijayan tn police-investigation TN Leaders condemns
விஜயன்PT Web

’புதிய தலைமுறை’ நெறியாளர் விஜயனிடம் போலீஸார் விசாரணை.. அலைக்கழிப்புக்கு தலைவர்கள் கண்டனம்!

புதிய தலைமுறை மூத்த பத்திரிகையாளர் விஜயனை, திருவல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திலேயே காக்க வைத்திருந்ததற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

நெறியாளர் விஜயனிடம் போலீஸார் விசாரணை

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்களின் அடிப்படையில், மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் தமிழக காவல் துறையினர் விசாரணை செய்தனர். தனக்கு தெரிந்த விஷயங்களைத் தெரிவித்தபின்னரும், இரு நாட்கள் விசாரணை என்ற பெயரில் விஜயனை போலீஸார் அலைக்கழித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும்கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. பல தொலைக்காட்சிகளிலும் விவாதங்களிலும் பங்கேற்றுவந்தவர் திருநாவுக்கரசு. அதேபோல, ‘புதியதலைமுறை’ விவாதங்களிலும் பங்கேற்றுவந்தார்.

விவாதங்களுக்குப் பேசவரும் பல விருந்தினர்களுடனும் தொழில்முறை உறவைப் பராமரித்துவந்த விஜயன், திருநாவுக்கரசுடனும் அத்தகைய உறவில் இருந்துள்ளார். அந்தச் சமயத்தில் இருவரும் வாட்ஸப்பிலும் உரையாடி வந்துள்ளனர். இத்தகு சூழலில்தான், தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இது நடந்து இரு வாரங்களான நிலையில், விஜயனை விசாரணைக்கு வருமாறு ஜூலை 15 அன்று சம்மன் அனுப்பினர் போலீஸார்.

இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினமே போலீஸாரைச் சந்தித்த விஜயன், அவர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்ததோடு, தன்னுடைய செல்பேசி உரையாடல்களையும் காட்டி வீடு திரும்பினார். ஆனால், நள்ளிரவில் மீண்டும் அவரை அழைத்த போலீஸார் 2 மணி வரை அவரை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததோடு, மறுநாளும் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்க வைத்திருந்தனர்.

போலீஸாருக்கு எவர் ஒருவரையும் விசாரிக்கும் உரிமை உண்டு. ஆனால், அது சட்டரீதியாகவும், கண்ணியமான வகையிலும் அமைதல் முக்கியம். தவிர, பத்திரிகையாளர்கள் தொழில்நிமித்தம் உரையாடும் ஜனநாயகவெளி மதிக்கப்படுவதும் அவசியம்.“ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்” என்று இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பானது போலீஸாரின் அணுகுமுறை சார்ந்த தீவிரமான கவனத்தைக் கோருகிறது. இந்த தகவல் வெளியே தெரிய ஆரம்பித்ததும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கலாயினர். சமூக வலைதளங்களிலும் விஜயனிடம் நடத்தப்பட்ட விசாரணை தீவிர விவாதப் பொருளாகியுள்ளது!

தலைவர்கள் கண்டனம்!

விசாரணை எனும் பெயரில் அராஜகமான முறையில், பத்திரிகையாளர் விஜயனின் தொலைபேசியை பறிமுதல் செய்திருக்கும் காவல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஜனநாயக அடிப்படையில் விமர்சிக்கும் மாற்றுக்கட்சியினரைப் பழிவாங்கும் கீழ்மையான அரசியலை, தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் தவெக அரசு செய்ய தொடங்கிவிட்டதாகவும் கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கு விசாரணை என்ற பெயரில் ‘புதிய தலைமுறை’ நெறியாளர் விஜயனை அச்சுறுத்துவதா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயனை காவல் நிலையத்துக்கு அழைத்து கண்ணியக்குறைவாக நடத்துவதும், அவரது அலைபேசியை பிடுங்கிவைத்துக் கொள்வதும் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். அரசு மீதான விமர்சனங்களை பேசுபொருளாக மாற்றும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதும், அரசு கேபிளில் இருந்து காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதுமான போக்குகள் கருத்துரிமை மீது தொடுக்கப்படும் கோரத் தாக்குதலாகும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

’புதிய தலைமுறை’ நெறியாளர் விஜயனை அலைக்கழித்து அவரது செல்போனை காவல்துறை பறித்ததற்கு திமுக ஐ.டி.பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சியினரை பழி வாங்குவது என்ற வரிசையில் தற்போது ஊடகவியலாளர் விஜயனை காவல்துறை குறி வைத்துள்ளதாக திமுக ஐ.டி. பிரிவு கருத்து பதிவிட்டுள்ளது. கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று, விஜயன் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அலைக்கழிப்பதாகவும், சட்டத்தை மதிக்காத இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் திமுக ஐ.டி.பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் விஜயன் மீதான விசாரணை நடவடிக்கைகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். வெளிப்படையான விளக்கமின்றி அவரது செல்போனை பறிமுதல் செய்திருப்பது கவலையளிப்பதாகவும் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளரின் தகவல் தொடர்பு சாதனத்தை கைப்பற்றுவது என்பது அவரது தனிப்பட்ட உரிமையோடு மட்டுமல்ல; ஊடகத்தின் சுதந்திரமான செயல்பாடு, செய்தி மூலங்களின் பாதுகாப்பு மற்றும் கருத்துரிமையுடன் தொடர்புடையது என்றும் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

’புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயனிடம் விசாரணை எனும் பெயரில் காவலில் வைத்து அலைக்கழித்ததுடன், அவரின் செல்போனை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ள காவல் துறையின் செயல், கண்டனத்துக்குரியது என அமமுக பொதுச்செயலர் தினகரன் விமர்சித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தவெக சட்டமன்ற உறுப்பினர் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் காவல் துறை, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததாக, ஆளுநரிடம் வழங்கப்பட்ட போலி கடித விவகாரத்தில் காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் விஜயனை காவல்துறை அலைக்கழித்திருப்பது பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

’புதிய தலைமுறை’ தொலைகாட்சி நெறியாளர் விஜயன் செல்போனை பறிமுதல் செய்து, அவரை தடுத்துவைத்த காவல் துறையின் நடவடிக்கைக்கு சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், காவல் துறையின் அழைப்பின் பேரில் ‘புதிய தலைமுறை’ நெறியாளர் விஜயன் புதன் நள்ளிரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2 முறை ஆஜரானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விஜயன், காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்திரிகையாளர்களை மிரட்டி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவல் துறையின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சென்னை பத்திரிகையாளர் மன்றச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை அச்சுறுத்துவதை நிறுத்த காவல் துறையினருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com