பெண் குழந்தைகளை பெற்ற தாய்-தந்தை ஒருவர் முகத்தில் கூட சிரிப்பு இல்லை என்றும், 2வது குழந்தையின்போது ஸ்கேனில் என்ன குழந்தை என்பதை தெரிந்துகொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என தென்காசியை சேர்ந்த யூடியூபர் ஒருவர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினத்தை அறிந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும். அதனையும் மீறி பல இடங்களில் பாலினத்தை அறிந்துகொள்ள முயற்சித்ததாக அவ்வப்போது கைதுநடவடிக்கையும் நடந்துவருகிறது. தொடர்ந்து பாலினத்தை அறிந்துகொள்வது சட்டப்படி தவறு என்ற அறிவுரைகள் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண் குழந்தைகளை பெற்றதால் தாய்-தந்தை ஒருவர் முகத்தில் கூட சிரிப்பு இல்லை என்றும், என்ன குழந்தை என அறிந்துகொள்ள அரசு அனுமதி வழங்கவேண்டும் என்றும், மருத்துவர்கள் மட்டும் அதை அறிந்துகொண்டு ஆண்குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள், எந்த மருத்துவருக்காவது இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா என்றும் இளைஞர் ஒருவர் பேசி வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் பேசி வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பேசிய இளைஞர், “நேத்து காலையில ஒருத்தவங்களுக்கு குழந்தை பிறந்ததால அவங்கள பார்க்க மருத்துவமனை போய் இருந்தோம். அந்த மருத்துவனைல இன்னைக்கு மட்டுமே 8 குழந்தை பிறந்திருக்கும், அதில் பிறந்த ஒரு குழந்தை கூட ஆண் குழந்தை கிடையாது எல்லாமே பெண் குழந்தைங்க தான். ஏற்கனவே ஆண் குழந்தைங்க பிறக்குறது குறைஞ்சிடுச்சு, இதுபோல போயிட்டு இருந்தா எதிர்காலத்துல பெரிய பிரச்னை வரும்.
என் மனசுல பட்டத சொல்றன் ஒருத்தருக்கு முதல் குழந்தை எதுவா வேணா இருக்கட்டும், ஆனா இரண்டாவது குழந்தை என்ன குழந்தைன்னு ஸ்கேன்ல தெரிஞ்சிக்க அனுமதிச்சா மட்டும்தான் ஆண் குழந்தைங்க பிறப்ப அதிகப்படுத்த முடியும். இல்லனா வருங்காலத்துல ஆண் குழந்தைங்க எண்ணிக்கை ரொம்பவும் கம்மியாகிடும்.
கருவுல இருக்க சிசுவ அழிக்கிறது தப்புனு நீங்க சொல்லுவிங்க, ஆனா ஒருவாட்டி தான் பொறக்கபோறோம், அந்த ஒருவாட்டி ஆம்பள புள்ள வேணுங்குற ஆசை அவனுக்கு இருக்காதா? அந்த பெண்ணுக்கு இருக்காதா? பெண் குழந்தைய பெத்த 8 பேரோட முகத்துலையும் துளிகூட சந்தோஷம் கிடையாது. குழந்தைய பெத்த அம்மா மயக்கத்துல இருந்து கண்விழிச்ச பிறகு போய் பார்த்தோம், 8 குழந்தையோட அம்மா முகத்துலயும் சந்தோசம் கிடையாது. ஏன் பொம்பள புள்ள பெத்தா ஆகாதாணு கேட்பீங்க, நான் அப்படிலாம் சொல்லல எல்லாமே குழந்தைங்க தான், ஆனால் ஒரு ஆண் குழந்தையும் வேணும்.
காசு இருக்கவன், அந்தஸ்த்துல இருக்கவன், அரசியல் சப்போர்ட் இருக்கவன் எல்லாம் வயித்துல என்ன குழந்தை இருக்குனு பார்த்து அதற்கு தகுந்தமாதிரி குழந்தை பெத்துக்குறான். நம்மள மாதிரி இருக்கவங்க கிட்ட மட்டும்தான் அரசு சட்டம், நடவடிக்கைனு வேலைய காட்டுது.
எனக்கு மனசுல ஒரு கேள்வி தோனுது, எந்த மருத்துவருக்காவது பிறந்த 2 குழந்தையும் பெண் குழந்தையா இருக்குறத பார்த்து இருக்கீங்களா. நான் பார்த்ததில்லை” என பேசி பதிவிட்டுள்ளார்.
இளைஞர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில், பாடகி சின்மயி உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்புகளை பதிவுசெய்தனர். மேலும் கைதுசெய்ய வேண்டும் என்ற குரலும் அதிகமாக எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தென்காசி ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முகமூடி அணிந்த யூடியூபர் தீபன் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு தீபன் சிறையில் அடைக்கப்பட்டார்.