கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாகச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள், அதனை திரும்பப் பெற்றனர். ஏன் என்று பார்க்கலாம்.
வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு பதிலாக குடியிருப்பு நிலங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி நேரடியாகச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பேரணி செல்வதற்காக விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான ஷம்பு எல்லையில் ஒன்று கூடிய நிலையில் காவல்துறையினர் அவர்கள் முன்னேறாமல் இருக்க தடுப்புகளை அமைத்திருந்தனர்.
இருப்பினும், காவல் துறையினரின் தடுப்புகளை அகற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் முன்னேற முயன்றதால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
இந்நிலையில், டெல்லியை நோக்கிப் பேரணியாகச் செல்லும் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். கண்ணீர் புகை வீசியதில் ஆறு விவசாயிகள் காயம் அடைந்து இருப்பதாகவும் சில உயிர்சேதங்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.