“விஜய் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார்; மலினமான அரசியல் செய்கிறார்” - ஆளூர் ஷாநவாஸ் காட்டம்!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “தமிழகத்தில் ஊழலை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். மன்னராட்சியைக் கேள்வி கேட்டால் சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026-இல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது. தமிழகத்தை, கருத்தியல் தலைவர்கள்தான் ஆள வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்டால் தர முடியாது என்கிறார்கள். ஏன் நாங்கள் கேட்கக் கூடாது? எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை ஏன் பேசக்கூடாது?” என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் புதிய தலைமுறையில் ‘அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா விஜய் பங்கேற்பு - திருமா தவிர்ப்பு... யார் வியூகம் வென்றது?’ என்ற தலைப்பில் நடந்த நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், “நிகழ்ச்சியின் போக்கிலேயே, எங்கள் தலைவர் ஏன் இந்நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டார் என்று தெரியவந்துவிட்டது. விகடனின் தலைவரே அதன் தொடக்கத்தை அமைத்துவிட்டார். தமிழ்நாட்டில் ஒரு புதிய அணியை உருவாக்குவதற்காகத்தான் இதை கட்டமைத்து இருக்கிறார்கள். அம்பேத்கரை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி இது இல்லை. சாதாரண நூல் வெளியீட்டு விழாவாக இது இல்லை. அரசியல் காய் நகர்த்துவதாகதான் இந்த விழா அமைந்தது.
தலைவர் திருமாவளவன் எந்த நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணிந்து, இந்த நிகழ்வை புறக்கணிக்கவில்லை. அதற்கு அவரது அரசியல் நிலைப்பாடுகளும் செயல்களுமே சாட்சி. பல பதவிகளை துறந்திருக்கிறார். அப்படியிருக்கையில் ஆதவ் அர்ஜூனா இப்படி பேசியுள்ளது, அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இன்று எந்த மன்னரை ஒழிக்க வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அதே மன்னரை ஆட்சிக்கட்டலில் அமர வைக்க இவரேதான் (ஆதவ்) உழைத்தார். பின் எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது விஜய்யாக உழைக்கிறார். எங்கள் கட்சியில்தான் இப்போதும் இருக்கிறார். இருந்தாலும் அவரை கட்சியில் என்ன செய்வது என்பதுபற்றி எங்கள் தலைவர் முடிசெய்வார்.
இன்னொருபக்கம், இந்த நிகழ்ச்சிக்கு போகவேண்டும் என்றுகூறி எங்களுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. நூல் வெளியீட்டு மேடையாக இல்லாமல், விஜய்யின் அரசியல் மேடையாக இந்த மேடை அமைந்துள்ளது. அதனால்தான் எங்கள் தலைவர் இதில் பங்கேற்கவில்லை.
எங்களின் 25 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், எந்தவொரு பெரிய அணியிலும் எங்களை சேர்க்க வேண்டுமென்று யாருமே முனைப்பு காட்டியதில்லை. இன்று நாங்கள் திமுக அணியில் இருப்பதால்தான் இந்த முனைப்பும் காட்டப்படுகிறது. ஒரு வெற்றிகரமான கூட்டணியில் இருப்பதே எங்களுக்கு போராட்டமாக இருக்கிறது.
கட்சிக்கு முதன்முறையாக இப்போதுதான் அங்கீகாரமே கிடைக்கிறது. அதனால்தான் எங்கள் தலைவர் நிதானமாக முடிவெடுக்கிறார். இன்றைய தமிழ்நாடு களத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் கல்லூரி கொண்டு வந்தது, சாதி மறுப்பு திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொண்டு வந்தது, பாப்பாப்பட்டில் தேர்தலே நடக்க முடியாத இடத்தில் தேர்தலை நடத்திக் கொடுத்தது என எல்லாமே செய்தது திமுக அரசுதான். இதையெல்லாம் வேறு யாரிடம் நாங்கள் எதிர்பார்க்க முடியும்?
தருமபுரி பற்றியெறிந்த போது, விசிகவை தனிமைப்படுத்த, பாமக, எங்கள் கட்சி அலுவலகங்களுக்கு சென்றது. அப்போது திமுக சார்பில் கலைஞர்தான் குழுவை அனுப்பி, எங்களுக்காக நிலைப்பாடு எடுத்தார். இதையெல்லாம் ஒப்பிட்டே விசிக முடிவெடுக்க முடியும். அதையே நாங்கள் செய்தோம்.
‘இன்றுள்ள அமைச்சர்கள் எல்லோரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதும், அம்பேத்கரை புரட்சியாளர் என்று சொல்லுவதும் விஜய்க்கு கிடைத்த வெற்றி’ என்று ஒருவர் பேசுவது, அப்பட்டமான திரிபுவாதம். இதை ஒருவர் முன்மொழிந்தால், அது தவறு மற்றும் கண்டிக்கத்தக்கது.
அதை சொன்னது விசிக-வை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா என்றால், ஆதவ் அர்ஜூனா பேசியதும் தவறு. கண்டிக்கத்தக்கது. உண்மையில் அவர் விஜய் செய்த சாதனை என கூறியதையெல்லாம் செய்தது விசிக-தான். அப்படியிருக்கையில் விசிக-வின் கிரெடிட்டை விஜய்க்கு கொடுப்பது கண்டிக்கத்தக்க பேச்சு. வெகு மக்கள் மத்தியில் அம்பேத்கரை கொண்டு சென்றது, விசிக தலைவர் திருமாவளவன்தான்” என்றார்.
இவர் பேசிக்கொண்டிருந்தபோதே, நிகழ்வில் பேசிய விஜய், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிரஷர் இருக்கிறது என்பது என்னால் உணர முடிகிறது. அவர் வரவில்லை என்றாலும் திருமாவளவனின் மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என்றுகூறினார்.
இதற்கு பதிலளித்த ஆளூர் ஷா நவாஸ், “எங்கள் தலைவர் குறித்து ஜெயலலிதா அம்மையாரோ, கலைஞரோ, இன்றைய முதல்வரோகூட இப்படி பேசியவதில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து எங்கள் தலைவர் விலகியபோதுகூட, ‘தம்பி எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்’ என்றே சொன்னார் ஜெயலலிதா அம்மையார். அதுவே எங்கள் தலைவர் பெற்ற சான்றிதழ்.
அப்படியிருக்கையில், யார் இந்த விஜய்? உண்மையில் விஜய் எங்கள் தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார். இன்றுவரை எங்கள் தலைவர், எழுதிவைத்து பேசினார் என்றுகூட யாராலும் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட ஒருவரை, நேற்று வந்த ஒருவர் இப்படி பேசலாமா? எங்கள் தலைவரை மலினப்படுத்துகிறார். மீன் விற்பதுபோல கூறுபோட்டு யாரும் யாருக்கும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததில்லை. ஆனால் இன்று மேடைப்போட்டு அப்படித்தான் பேசுகிறார் விஜய்.
இது விகடன் நடத்தும் நூல் வெளியீட்டுக்கான ஒரு பொதுவிழா அல்ல. முழுக்க முழுக்க வடிவகைக்கப்பட்ட மேடை. இது அரசியல் விழா. வலையை விரித்துவைத்து கல்லை எறிகின்றார்கள். நாங்கள் தெரிந்தும் எப்படி விழுவோம்? திட்டமிட்ட அரசியல் காய் நகர்த்தும் விழாதான் இது. விசிக-விற்கு அரசியல் அழைப்பு விடுக்கிறார் விஜய். மலினமான அரசியலை வெளிப்படுத்துகிறார் விஜய்” என்றார் காட்டமாக.