வாலாஜாபேட்டையில், நகைக்காக தாயை கொலை செய்த மகள் சரண்யா கைது செய்யப்பட்டார். தாயின் மறுப்பால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததுடன், கொள்ளை நாடகமாடியதும் போலீசார் விசாரணையில் வெளிச்சம் பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தாங்கல் விஐபி சிட்டி பகுதியில் கீதா (54) என்பவர் ரத்த வெள்ளத்தில் அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், கீதாவின் மூத்த மகளும் தனியார் பள்ளி ஆசிரியையுமான சரண்யா (34), தனது சொந்தத் தேவைக்காக தாயிடம் 30 சவரன் நகைகளை அடகு வைக்கக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கொலையை மறைத்து கொள்ளைச் சம்பவம் போன்று நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சரண்யாவைக் கைது செய்த போலீசார், அவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் சரண்ராஜ் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக பெற்ற தாயையே மகள் கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.