செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகியுள்ள, தக் லைஃப் திரைப்படம், இன்று கர்நாடக மாநிலம் தவிர உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரத்தில் 5 திரையரங்குகளில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தக் லைப் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த கர்நாடக தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் கர்நாடகா - தமிழக எல்லையில் அமைந்துள்ள ஓசூரில் தக் லைஃப் திரைப்படம் காண கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்
இதையடுத்து காலை 9 மணிக்கு தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சியை காண திரையரங்கம் முன்பு குவிந்துள்ள ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து விழா போல் கொண்டாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஓசூர் ரசிகர்கள், கர்நாடகா தமிழர்களுக்காக சிறப்பு காட்சி ஒதுக்கி படத்தை பார்க்க வைத்துள்ளனர். இது கர்நாடகாவில் உள்ள தமிழருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது