நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தலைவராகும் நயினார் நாகேந்திரன்..? அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு! பாஜகவின் மெகா கணக்கு!

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என கருதப்படும் சூழலில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் அறியலாம்.

கணபதி சுப்ரமணியம்

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என கருதப்படும் சூழலில், அதற்கான காரணம் என்ன?.. புதிய தலைவருக்கான இலக்குகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து, பாஜக வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அதுகுறித்து தற்போது காணலாம்....

நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்தசூழலில், அவரை தலைவராக நியமிப்பது தொடர்பாக நடைபெறும் ஆலோசனைக்கு பின்னால், கூட்டணி மற்றும் சமூக கணக்குகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.. அண்ணாமலை தலைவராக இருப்பது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் அவரை மாற்ற பாஜக தலைமை விரும்புவதாகவும், அதேசமயம், வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை அதிகம் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், நயினார் நாகேந்திரனை தலைவராக்க பாஜக தலைமை ஆலோசிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜம்மு-காஷ்மீர் பயணத்தை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி திரும்பியதும், தமிழ்நாடு பாஜக தலைவரை நியமிப்பதற்கான நடைமுறைகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி - அமித்ஷாவே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. அதேவேளையில், விரைவில் புதிய பாஜக தேசிய தலைவர் மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களும் தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு ஆற்றக்கூடும் என கூறப்படுகிறது.

அண்ணாமலை

இதனிடையே, அண்ணாமலை விரைவில் டெல்லிக்கு அழைக்கப்படுவார் எனவும், அப்போது அவருக்கான புதிய பொறுப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதேவேளையில், தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கு பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் பாஜகவின் மேலிட தலைவர்கள்.. அதிமுகவோடு பாமக உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைப்பதும், திமுகவிற்கு எதிராக யூகம் அமைப்பது அவரது முதல் இலக்கு என்கிறார்கள்... அதேபோல் மும்மொழிக்கொள்கை, மக்களவை தொகுதி மறுசீரமைப்பு, நீட், நிதி பங்கீடு, வக்ஃப் திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்குவதும், திமுக கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுப்பதும் அவரது பணிகளாக இருக்கும் என்கிறார்கள்... புதிய தலைவரோடு தமிழக அரசியலில் தடம் பதிக்க விரும்பும் பாஜகவின் வியூகம் எடுபடுமா என்பதை, 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெரிவித்து விடும்.