வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ’டித்வா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெட்வா லகூனைக் குறிப்பிட்டு, ஏமன் இந்த அமைப்புக்கு டித்வா என்ற பெயரை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. சோகோட்ராவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள பெரிய உப்பு நீர் தேக்கத்திலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டிருக்கலாம் என்றும் இது பிராந்தியத்தின் புவியியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றும் ஆர்.எம்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதேபோல், பாம்பன், தூத்துக்குடி ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, நவம்பர் 27 முதல் 29 வரை தீவுகளில் மணிக்கு 30-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 29ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வங்காள விரிகுடாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.