தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு pt web
தமிழ்நாடு

வெள்ள நிவாரண நிதி | மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

PT WEB

வெள்ள நிவாரண நிதி வழங்வில்லை எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான வெள்ள பேரிடர் மீட்பு நிதி ரூ.2000 கோடி வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக இருக்கும் குமணன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு

ஏற்கனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு என்ன மாதிரியான இயற்கை பேரிடர்களை சந்தித்தது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கெனவே கேரள அரசு மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசும் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள் தொடர்ச்சியாக, நிதி சம்பந்தமான விஷயங்களில் மத்திய அரசை நாடாமல் நீதிமன்றத்தை நாடத் தொடங்கியுள்ளனர். ஆளுநர் விவகாரத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே சாடிய முதல்வர்!

முன்னதாக வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வேலூரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியிருந்த அவர், மாநில அரசுகளை சிறுமைப்படுத்துவதே பாஜகவின் நோக்கம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

மாநில அரசுகளின் தொடர் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மதியம் பதிலளித்திருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது. அதில் அவர், “தமிழகத்தில் மிக்ஜாம் புயல், மழை வந்தவுடனே 950 கோடி நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சென்னைக்கு 5 ஆயிரம் கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்காது. அந்த 5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது என்று தமிழக அரசு கூற வேண்டும்” என சாடியிருந்தார்.

இப்படி தொடர்ந்துகொண்டிருந்த மத்திய - மாநில அரசு மோதல்கள், தற்போது நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.