தவெக தலைவர் விஜய் ஆளுநர் சந்திப்பு முகநூல்
தமிழ்நாடு

ஆளுநரை சந்தித்த விஜய்... பேசியது இதுதான்! வெளியான அறிக்கை!

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளார் .

ஜெனிட்டா ரோஸ்லின்

இன்று காலை தவெக தலைவர் விஜய் பெண்களின் பாதுகாப்பு குறித்து கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட்டிருந்தார், இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணி அளவில் தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசப்போவதாக தகவல் வெளியானது.

இதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய தவெக தலைவர் விஜய், கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார். மேலும், திருக்குறள் புத்தகத்தையும், பாரதியார் கவிதைகள் தொகுப்பையும் ஆளுநருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்தவகையில், ஆளுநர் உடனான சந்திப்பில் விஜய் என்ன பேசினார் என்பது தொடர்பான விஷயங்களை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் .

அதில், “ இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம்.

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.