வேல்முருகன்
வேல்முருகன் pt web
தமிழ்நாடு

“அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” - வேல்முருகன், த.வா.க

Angeshwar G

அரசியலில் எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே எதார்த்த நிலை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய அவர், “நாங்கள் எங்கள் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளோம். தேர்தலுக்காக திமுகவில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்குழுவை சந்தித்து எங்களுக்குரிய இடங்களை ஒதுக்கித் தாருங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்க இருக்கிறோம்.

கேள்வி: தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதால் உலக வரைபடத்தில் தமிழகத்தின் அடையாளம் தற்போது தெரிய வருகிறது என சொல்லியுள்ளாரே?

“பாஜகவில் இந்திய அளவில் பொறுப்பில் இருக்கக்கூடிய வானதி சீனிவாசன் அப்படித்தான் பேசவேண்டும், அப்படித்தான் பேசுவார். எங்களைப் பொறுத்தவரை பிரதமர் மோடியின் தமிழக வருகையால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கப்படுகிறதா என்பதைத்தான் நாங்கள் பார்ப்போம்.

அப்படி ஒரு நன்மைகளோ, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களோ தமிழகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை. எப்படியாவது தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், பாஜக எனும் அரசியல் கட்சி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் அவரது வருகை தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பது”

கேள்வி: நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் I.N.D.I.A கூட்டணியில் கூடுதலாக கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா? ‘INDIA கூட்டணி உடையப்போகிறது. அதிலிருந்து சிலர் வெளியேற வாய்ப்புள்ளது. அவர்கள் எங்களுடன் வருவார்கள்’ என சிலர் சொல்லுகின்றனரே?

“அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது யதார்த்த நிலை. தேர்தல் அறிவித்த பிறகுதான் அதுகுறித்து முழுமையாக தெரியவரும். இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிற மதச்சார்பின்மையை பின்பற்றுகிற அரசியல் கட்சிகளில் எந்த ஒரு கட்சியும் பாஜகவின் தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்துள்ளார்.