தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே செல்கிறது. அபாயகரமான இந்தப் போக்கு குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலம் வாங்க.. இந்தியாவில் மக்கள் தொகை விகிதம் குறைந்து கொண்டே இருக்கும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு என்பது நமக்கு தெரியும். இந்தப் போக்கு ஆண்டுக்காண்டு தீவிரமாகி வருவதை சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஓர் உதாரணத்துக்கு, 2012ஆம் ஆண்டு 12லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறந்தநிலையில்... தற்போது 8.4 லட்சம் குழந்தைகள் மட்டுமே தமிழ்நாட்டில் பிறக்கின்றன. அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலையே வேறு. 1971இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிஹாரின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தன.
அப்போது இருமாநிலங்களிலும் மக்கள் தொகை எண்ணிக்கை 4 கோடியை ஒட்டியிருந்தது. இன்றைக்கு தமிழ்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8 கோடி. பிஹாரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 12கோடியைத் தாண்டிவிட்டது என்கின்றன புள்ளிவிவரங்கள். ஏனென்றால், பிஹாரின் பிறப்பு விகிதம் 3 என்று உள்ளநிலையில், தமிழகத்தில் அது 1.4 ஆக இருக்கிறது. அதாவது, சராசரியாக பிஹாரில் ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள் என்றால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்துக்கு 2 குழந்தைகள் கூடஇல்லை.
இதற்கு முக்கியமான காரணம் 1970களில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டுமென அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது; அதை தீவிரமாக பின்பற்றிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று! நாளடைவில் கச்சிதமான வாழ்க்கைக்கு குறைவான குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு தமிழ்ச்சமூகம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்ல; பெரும்பாலான தென்னக மாநிலங்களில் இதுவே நிலைமை. ஆனால் அரசியல் ரீதியாகவும் சரி; குடும்ப ரீதியாகவும் சரி; இது சரியானபோக்கு இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள் நிபுணர்கள். அரசியல் ரீதியாக பார்த்தால், யாரிடம் எண்ணிக்கை பலம் இருக்கிறதோ, அவர்களிடமே அதிகார பலம் இருக்கிறது. இதுவரை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உத்தரபிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட, நாட்டிலேயே அதிகமான மக்கள் தொகையை கொண்ட மாநிலம் அது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்துபார்த்தால், ஒரு குழந்தை அல்லது இருகுழந்தைகளைக் கொண்ட குடும்பங்களால், வயதான பின்பெற்றோர்களை பார்க்க முடியாத சூழல் உருவாகிவிடும். இன்றைக்கு எல்லாம் 80வயது வரை வாழ்வது சாதாரணம் ஆகிவிட்டது. ஆனால், 80 வயதில் பெற்றோரைக் கொண்ட ஒரு பிள்ளை 60 வயதை நெருங்கும்போது அதுவே முதியவர் ஆகிவிடும். பெற்றோர் பிள்ளை இருவருக்குமே இந்த வயதில் வருமானம் நின்றுவிடும். ஆக, வயதான பெற்றோர் பராமரிப்பை பகிர்ந்து கொள்ளவேனும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். தவிர இளைஞர்கள் இல்லாதவர்கள் வறுமை நோக்கி தள்ளப்படுவது இயல்பு. குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இதுவே நிலை.
ஜப்பான் கொரியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இந்த துயரத்தை எதிர்கொள்கின்றன. ஆகையால்தான் குழந்தைப் பிறப்பை பல நாடுகளும் இப்போது ஊக்குவிக்கின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வந்தர மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும்,மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை என்றும் தொடர்ந்து பேசி வருவதை இங்கே குறிப்பிடலாம்.
தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினும் இது குறித்துதொடர்ந்து பேசி வருகிறார். ஆனாலும்,பொதுச் சமூகத்தில் தீவிரமான ஒரு விவாத பொருளாக இன்னமும் இது உருவெடுக்கவில்லை. சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளி விவரமோ குழந்தை பிறப்பில் தமிழ்நாடு கவனம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தை தீவிரமாக நமக்கு உணர்த்துகிறது..