பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம்
பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்.. விஜய் பட வீடியோக்கள் பதிவேற்றம்!

யுவபுருஷ்

செய்தியாளர் - அன்பரசன்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம், 'Tamilnadu School Education Department' என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில், இந்த பக்கத்தை சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் சார்ந்த அறிவிப்புகள், பாடநூல் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள் என தொடர்ச்சியாக இந்த முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இதுபோன்ற காணொளிகளால், ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து, முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தபோது, அந்த பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, ஹேக் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முகநூல் பக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் ஹிந்தி வெர்ஷன் திரைப்பட காட்சிகள் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நேற்று காலையிலிருந்து தொடர்ச்சியாக, மாஸ்டர் படத்தின் ஹிந்தி வெர்ஷன் திரைப்பட காட்சித்தொகுப்புகளை மர்ம நபர்கள் பதிவிட்டு வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், முகநூல் பக்கத்தை மீட்டுத்தரும்படி பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் சார்பில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

புகாரின் பேரில் முகநூல் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதுடன் ஹேக் செய்த மர்ம நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அலுவலக அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் சினிமா காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.