பொங்கல் பரிசுத்தொகை  x
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம்.. பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா.?

தமிழ்நாடு அரசு அறிவிக்கவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்க பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

PT WEB

தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக மூன்றாயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இந்த நடவடிக்கை பொதுமக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. 2021ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா நிவாரணமாக ரொக்கம் வழங்கியதைப் போல, இம்முறை பொங்கலுக்கும் அதேபோல ரொக்கம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதேபோல், இந்தாண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. அதேநேரம், 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்க பணமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோப்புப் படம்

2021ல் திமுக அரசு அமைந்த பிறகு, கொரோனா பெருந்தொற்று, மழை வெள்ளம் போன்ற பாதிப்புகளின் போது, சென்னையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாயும், பிற மாவட்டங்களில் நான்காயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட்டது.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இதேபோல், தற்போதும் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. 2021 தேர்தலுக்கு முன்பாக, அப்போதையை அதிமுக அரசு, பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் வழங்கியது. ஆனால், அதனை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக வலியுறுத்தியது. 2021ல் திமுக வைத்த கோரிக்கையை, இப்போதைய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்க பணமாக மூன்றாயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.