மத்திய பிரதேசம்| குடிநீரில் கழிவு கலந்து 13 பேர் பலி.. கூலாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த கவுன்சிலர்!
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமாக 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கவுன்சிலர் கமல் வகேலா ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால்13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
கழிவுநீர் கலந்த அசுத்தமான நீரை குடித்ததன் காரணமாக 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தற்போது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகீரத்புரா பகுதியில் உள்ள ஒரு பொதுக்கழிப்பிடத்திற்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாகாவே, குடிநீருடன் கழிவுநீர் கலந்தது என்றும், அதுவே உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும், குடிநீர் குழாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், அதிகாரிகளின் கவனக் குறைவே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
இந்தச் சூழலில், மக்களுக்கு ஆறுதல் கூறி உதவி செய்ய வேண்டிய அதே பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் கமல் வகேலா, எவ்விதக் கவலையுமின்றி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த காட்சிகள் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, குடிநீரில் கழிவுநீர் கலந்த சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "தேவையற்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்" என்று ஊடகவியலாளரை ஒருமையில் பேசி அவமதித்திருந்தார். அந்த நேரத்தில் அமைச்சரின் அருகில் இருந்து கொண்டு, அமைச்சரின் அநாகரிகப் பேச்சைத் தற்காத்துப் பேசியவர்தான் இந்த கமல் வகேலா என்பது தற்போது தெரியவந்துள்ளது.
"உயிர்கள் போனதை விட இவர்களுக்கு ஊஞ்சலில் ஆடுவதும், மேலதிகாரிகளைத் தற்காப்பதும் தான் முக்கியமா?" என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட வார்டின் மக்கள் பிரதிநிதியே இவ்வளவு அலட்சியமாக இருப்பது குறித்த செய்திகள் வைரலாகி வரும் நிலையில், பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே அமைச்சரின் பேச்சு சர்ச்சையான நிலையில், கவுன்சிலரின் இந்த 'ஊஞ்சல் ஆட்டம்' எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஊஞ்சலில் அமர்ந்திருந்தது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் கவுன்சிலர் கமல் வகேலா, “குடிநீரில் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக முதன்முதலில் புகாரளித்தது நான் தான். மூன்று நாட்களாக நான் தூங்கவில்லை. தொடர் வேலைகளிலேயே இருந்து வருகிறேன். மேலும், நான் ஒர் நீரிழிவு நோயாளி, ஓய்வெடுப்பதற்காகவே ஊஞ்சலில் அமர்ந்தேன். ஊஞ்சலாடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

