அதிமுக எம்எல்ஏ-கள் ராஜினாமா Pt web
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ-கள் 3 பேர் ராஜினாமா.. தவெகவில் இணைவு.. அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்!

எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பொன்விழா கண்ட அதிமுகவில், சி.வி. சண்முகம், எஸ்.பி வேலுமணி தரப்புக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமியின் தரப்புக்கு இடையே கடுமையான உட்கட்சிப் பூசல் நடந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக கே. பழனிசாமி பதவியேற்றது முதல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை 11 தோல்விகளை அதிமுக சந்தித்திருப்பதாக எஸ்.பி. வேலுமணி தரப்பினர் கூறுவதுடன், கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோல, தவெகவின் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வின் போதும், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு வாக்களித்தது இபிஎஸ் தரப்பிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, விசிக, காங்கிரஸ் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கும் தவெக அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட்டது. எனினும், அத்தரப்புக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தான், பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வின்போது, எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்து தவெகவுக்கு ஆதரவளித்திருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள், மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய மூன்று பேர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கின்றனர். ராஜினாமா கடிதம் அளித்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெகவிலும் இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏ-கள்

ஏற்கனவே, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 6 மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலுடன் சேர்த்து மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தவெகவில் இருந்து இவர்களுக்கே வாய்ப்பளிக்கபடுமா? அல்லது வேறு யாராவது இத்தொகுதியில் நிறுத்தப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.