பீகார் பரப்புரையில் மோடி pt web
தமிழ்நாடு

"பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது" - மோடி கருத்து... தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

உழைக்கு பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்று பீகார் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், பிரதமரின் கருத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிபடுத்தியுள்ளனர்.

PT

பீகார் தேர்தல் சட்டப்பேரவையின் முதல் கட்டத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், பீகாரின் முசாபர்பூர் பகுதியில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாட்டில் வசித்துவரும் பீகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை திமுகவினர் துன்புறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழர்களுக்கும், பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல் இது என்று விமர்சித்திருத்திருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் இந்தக் பேச்சு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் வெளிபடுத்திய கருத்துக்கள் குறித்து பார்க்கலாம்....

தமிழிசை சௌந்தராஜன்

"பிரதமர் மோடி தமிழர்கள் என்று எந்த இடத்திலும் கூறவில்லை" - தமிழிசை சௌந்தராஜன்

பீகாரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன், "பிரதமர் மோடி பீகார் பரப்புரையில், தமிழர்கள் என்று எந்த இடத்திலும் மோடி சொல்லவில்லை; தி.மு.க.தான் தமிழ்நாட்டில் உள்ள பீகார் மக்களை இழிவுபடுத்துகிறது. ​'அவன் பீகாரி, அவன் வட இந்தியன், வடக்கன் என்று பிரிவினை ஏற்படுத்திக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்'. மேலும், கே.என். நேரு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் பீகார் மக்களை இழிவுபடுத்திப் பேசியுள்ளனர்.

தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனங்களை 'தமிழர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம்' எனக் கூறித் திரித்துப் பேசுவதற்கு எட்டு கோடி தமிழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், தி.மு.க.வைச் சொன்னதை தமிழர்களை சொன்னதாக திரித்துப் பேசுவதற்கு எனது கடுமையான கண்டனம்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வேறு; திமுக-வினர் வேறு அல்ல - செல்வப் பெருந்தகை

பிரதமர் மோடி பீகார் தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, "தமிழகத்தில் பீகார் தொழிலாளிகள் தி.மு.க.வினரால் தாக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார். உச்சபட்ச பதவியில் இருக்கும் பிரதமர் மோடி இப்படி சொல்வது வேதனையை அளிக்கிறது மற்றும் கண்டனத்திற்குரியது.

தி.மு.க வேறு, தமிழர்கள் வேறு அல்ல. இது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தப்படுத்துவதாகும்.‌ பிரதமர் மோடி அந்த கருத்தை திரும்பப்பெற வேண்டும்" என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடி வாக்கு வங்கிகாக உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்றும், பீகார் மாநிலத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் இங்கு வந்து வேலைப்பார்த்து, பீகார் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு பொறாமை இருக்கிறது. கீழடி அகழ்வாய்வு, கலை கலாச்சாரம் அவர்களின் கண்களை உறுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மாணிக்கம் தாகூர், செல்வப் பெருந்தகை

"பாஜகவினர் உண்மையிலேயே தமிழகத்திற்கு விரோதிகள் என்பதை மீண்டும் பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்.

பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் பேசுகையில், " பிகாருக்குச் சென்று பிகாரிகளை பற்றி பேசாமல், தமிழர்களைப் பற்றி பேசுவது. ஒரிசாவிற்கு சென்று தமிழர்களை பற்றி பேசுவது என எங்கு சென்றாலும் தமிழர்களை திட்டுகிறார் பிரதமர் மோடி. இதன் மூலம், பாஜகவினர் உண்மையிலேயே தமிழகத்திற்கு விரோதிகள் என்பதை மீண்டும் பிரதமர் மோடி நிரூபித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து தமிழர்களை அவமனாப்படுத்துகிறார். எனவே, பிரதமர் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.பிரதமர் மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். ஆர்எஸ்எஸ் டிஎன்ஏ என்பது வெறுப்பு அரசியலை பேசுவது. சாதி மத இன மொழீ ரீதியாக வெறுப்பை பேச வேண்டும். அந்த டிஎன்ஏ . விளைவின் காரணமாகத்தான் இப்படி பிரதமர் பேசியுள்ளார்" எனப் பேசியுள்ளார்.

"பிகாரிகளை வந்தேறிகள் என்றார் முதல்வர்" - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, " பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்தை வைத்து தமிழ்நாட்டு அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் பிகாரிகளை பற்றி பேசியதை தான். பிரதமர் மோடி நேற்று பேசி இருக்கிறார். முதலமைச்சர் பிகாரிகள் வந்தேறிகள் எனப் பேசியதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். எனவே, இதைவைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் வட மாநிலம் தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம்" எனவும் தெரிவித்துள்ளார்.