ஈரோடு பரப்புரை அனுமதி மறுப்பு  Pt web
தமிழ்நாடு

ஈரோடு | தவெக பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன?

ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.

PT WEB

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய் தனது பரப்புரைப் பயணத்தை தொடங்க ஆயத்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில், வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியிடம் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் வாரி மஹால் அருகே உள்ள 7 ஏக்கர் தனியார் இடத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்தது. மேலும், 75,000 பேர் வந்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தவெக விஜய்

இந்நிலையில், தவெகவினர் கோரிய இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தவெக மனுவில் குறிப்பிட்டது 75,000 மக்களுக்கான போதிய இடம் இது இல்லை எனவும், பார்க்கிங் செய்வதற்கும் இடம் இல்லை எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொதுக்கூட்டத்திற்கு வேறு இடத்தை தேர்ந்தெடுக்க தவெகவினரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டத்திற்கு தவெகவினர் அனுமதி கோரியிருந்த நிலையில், கார்த்திகை தீபம் காரணமாக உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் அனுமதி மறுக்கப்படவில்லை..

இந்தசூழலில் ஈரோட்டில் அனுமதி அளிக்கப்படவில்லை என்ற தகவலுக்கு பதிலளித்திருக்கும் செங்கோட்டையன், “ஈரோட்டில் வாரி மஹால் அருகே தவெக தலைவர் பரப்புரைக்காக அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி மறுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. ஆனால் கால்துறையிடம், நாங்கள் கேட்டபோது அனுமதி மறுத்துள்ளதாக இதுவரை கடிதங்கள் எழுதவில்லை என தெரிவித்துள்ளார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக, டோல் கேட் அருகே மாற்று இடத்திற்கும் அனுமதி கேட்டு கடிதம் வழங்க இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.