மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் Pt web
தமிழ்நாடு

மொழிப்போர் தியாகிகளை ஏன் வணங்க வேண்டும்?.. வரலாற்றை திரும்பி பார்ப்போம்.!

தமிழ்மொழியின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூறும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

PT WEB

நெஞ்சுரம் கொண்டு தன்னுயிர் நீத்து மொழி காத்த தமிழர்களின் புகழ் போற்ற வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.

இந்தியா எனும் நவீன தேசம் எப்போது உருப்பெறலானதோ, அப்போதே இந்தியை இந்தியாவின் மைய மொழியாக சிந்திப்பதும், ஏனைய மொழி பிரதேசங்களில் இந்தியை மெல்லத் திணிப்பதும் ஆரம்பித்துவிட்டது. இந்திக்கு எதிராக நவீன தமிழ்நாடு இரு முறை பெரும் போர்களை முன்னெடுத்தது. முதலாவது போர் 1938இல் நடந்தது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் இந்தி கல்வி கட்டாயம் என்ற அரசாணை அப்போதுதான் வெளிவந்தது. இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழகம் உணர்வெழுச்சி மிக்க போராட்டத்தில் இறங்கியது. இந்தப் போராட்டங்களில் எண்ணற்றோர் எண்ணிலடங்கா தியாகங்களைச் செய்தனர். உச்சமாக, போராட்டத்தில் சிறைபட்ட நடராசன், தாளமுத்து இருவரும் சிறையிலேயே உயிர் நீத்தனர்.

நடராசன் - தாளமுத்து

நடராசனும் தாளமுத்துவும் தங்கள் உயிர் தியாகத்தால் உண்டாக்கிய வெப்பம் இந்தியைத் தமிழ்நாட்டின் பள்ளிகளுக்கு வெளியே தள்ளியது. அடுத்த பெரும் போர் 1965இல் நடந்தது. இந்த முறை தமிழ்நாட்டை மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த இந்தி பேசாத மாநிலங்களையும் சூழும் பேராபத்தாக வந்தது இந்தி. ஆம், சுதந்திர இந்தியா ஒரு குடியரசு நாடாக உருவெடுத்த 1950 ஜனவரி 26ஆம் தேதி, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, இந்திய அரசாங்கத்தின் அலுவல் மொழியாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மொழி அந்தஸ்தை இழக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த 15வது ஆண்டுதான் 1965. அதற்கான கெடு நாள்தான் ஜனவரி 26.

இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றால் அதை ஏற்க மாட்டோம் என்றும், ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தது யார்? நம்முடைய முன்னோர்தான்! கீழப்பழுவூர் சின்னச்சாமி “ஏ தமிழே நீ வாழ நான் துடிதுடித்து சாகிறேன்!” என்று சொல்லி தன்னுடைய இன்னுடலில் தீ வைத்துக்கொண்டு மாய்ந்தபோது இந்த மோசமான சட்ட ஏற்பாடுக்கு எதிராக ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்தெழுந்தது தமிழ்நாடு. அடுத்தடுத்து உயிர் தியாகங்கள். இந்தப் போராட்டத்தில் முன்னின்ற மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டார்கள்.

இந்தித் திணிப்பு போராட்டம்

தமிழ்நாட்டின் பேரெதிர்ப்பின் விளைவாக தன்னுடைய முடிவிலிருந்து இறங்கி வந்தது இந்திய அரசு. இந்தி மொழி பேசாத மாநிலங்களில் சூழல் மாறும் வரை இந்தியோடு இன்னொரு அலுவல்மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்று அறிவித்தது. இன்று இந்தியோடு ஆங்கிலமும் எல்லா இடங்களிலும் நீடிக்க தமிழகம் அன்று நடத்திய இந்தி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரே காரணம். நம்முடைய முன்னோரே காரணம். அவர்களுடைய தொலைநோக்கே காரணம். அவர்களுடைய தியாகங்களே காரணம். ஆகையால்தான் ஒவ்வொருவரு தமிழரும் மொழி தியாகங்களை வணங்குவது கடமை ஆகிறது!