TN government's clarification about data stoped TN Govt
தமிழ்நாடு

சுகாதார தரவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டதா? தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு வெளியிடும் சுகாதார தரவுகள் வெளியிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

Praveen Joshva L

தமிழ்நாட்டில் நோய்ப் பாதிப்புகள், நோய் பரவல் மற்றும் தாய்-சேய் இறப்பு விகிதங்களைக் கொண்ட மாதாந்திரச் சுகாதார அறிக்கைகள், தமிழக அரசின் முதன்மை மருத்துவத் திட்டங்களின் தாக்கம் மற்றும் பயன்கள் குறித்த மதிப்பீட்டு ஆய்வுகள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய மாதாந்திர அறிக்கைகளை (TN Health Bulletin) வெளியிடுவதை தமிழ்நாடு அரசு நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு சுகாதார நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசின் இந்த செயலால் வெளிப்படைத்தன்மையின்மை ஏற்படுத்தி அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கமளித்துள்ளது. அதில், மாதாந்திர சுகாதாரச் செய்திக்குறிப்பு (TN Health Bulletin), தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த உடன் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களிலும் சில நாளிதழ்களிலும் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2024 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தச் செய்திக்குறிப்பு வெளியிடும் பணி, கடந்த ஆட்சி காலத்திலேயே 2026 பிப்ரவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும், தற்போது, இந்தச் செய்திக்குறிப்பை மேலும் மேம்படுத்தி, விரிவான தகவல்களுடன் கூடிய புதிய வடிவில் வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அறிக்கையில், வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி தரவுகளுக்கான விரிவான பின்னணித் தகவல்கள், துறையின் புதிய திட்டங்கள் குறித்த தொகுப்பு, மாநில அளவிலான புதிய குறியீடுகள் மற்றும் மாவட்ட வாரியான முக்கிய சுகாதாரக் குறியீடுகள் ஆகியவை புதிதாக இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட செய்திக்குறிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.