விஜய் web
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு.. கவனிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் என்ன?

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று மாலை வெளியிட்டிருக்கிறார்.

Premkumar S

அரசின் தற்போதைய நிலை என்ன, ஏன் அந்த நிலை உருவானது, அதை சரிசெய்ய என்ன திட்டம் உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக விளக்கும் ஆவணம்தான் வெள்ளை அறிக்கை. அதாவது, கள எதார்த்தத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக வைக்கும் ஓர் அரசு ஆவணம். 2001 அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒருமுறை மற்றும் 2021 திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு முறை என தமிழகத்தில் 2 முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகம்

இந்தசூழலில் தான், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள முதல்வர் விஜய், தனது பதவியேற்பு உரையின்போது, கடந்த திமுக அரசு தமிழகத்தின் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றிருப்பதாகவும் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, துறை வாரியாக 35 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நிதித்துறை ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் மரியவில்சனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து கேள்வி எழுந்து வந்த நிலையில் நிதித்துறை சார்பில் வெள்ளை அறிக்கைய தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தன.

தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி

இந்தநிலையில், தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் நேற்று மாலை தலைமை செயலகத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் உண்மையான கடன் 13.18 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை கொரோனா பெருந்தொற்று ஆண்டைவிட அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதாகவும், சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

மரியவில்ச

தனிநபர் கடன் 1,28,934

தமிழ்நாட்டின் கடன் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில் தனி நபர் மீதான கடன் சுமை 1,28,934ஆக அதிகரித்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் குஜராத்தில் 17.6 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 19.7 சதவீதமாகவும், கர்நாடகாவில் 23.4 சதவீதமாகவும் உள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடன் விகிதம் 28.3 சதவீதமாக மிக அதிக அளவில் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவு உச்சம்

கொரோனா காலத்தைவிட, வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளதாக, தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் வருவாய் ஆதாரங்களின்றி புதிய நிதிப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆகியவற்றுக்கான செலவினம், 2025-26 நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2017 முதலே ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை, மத்திய அரசால் நிறுத்தப்படும் என்பது தெரிந்தே, அதற்கேற்ப வருவாய் ஆதாரங்களை விரிவுபடுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியீடு

அதாவது, ஆயத்தீர்வை, கனிமவளத் துறை ஆகியவை மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பும் ஊழலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், மூலதனச் செலவினத்தின் விகிதம், 2025-26 நிதியாண்டில் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், 2023 முதல் 26 காலகட்டத்தில், தமிழ்நாடு இழந்த மூலதன செலவின மதிப்பு சுமார் 28 ஆயிரத்து 217 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மின்சாரத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவி, மானியம் ஆகியவற்றுக்காக சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில், நிதி ஆதாரங்கள் திரட்டாமல், செலவினங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் நுகர்பொருள் வாணிபக் கழகம் கடன் 17 ஆயிரத்து 500 கோடியில் இருந்து 27 ஆயிரத்து 181 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.