தமிழகத்தில், திருமணங்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. இதற்காக 2009 -ல் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. திருமணத்தை பதிவு செய்திருந்தால் மட்டுமே திருமண உதவித்தொகை பெறும் திட்டங்களில் விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனையும் இருந்தது. லட்சங்களில் செலவு செய்து நடத்திய திருமணமாக இருந்தாலும், எளிய முறையில் நடந்த திருமணமாக இருந்தாலும் இந்த சட்டத்தின்படி அதை பதிவு செய்தல் அவசியம்.
பின்னர் இந்த சட்டத்தில் 2020-ஆம் ஆண்டு தமிழக அரசு திருத்தத்தை கொண்டு வந்தது. இந்த திருத்தத்தின்படி மணமகன் அல்லது மணமகள் இருக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் என கொண்டுவரப்பட்டது. திருத்தத்திற்கு பிறகு, அதிக திருமணங்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவான திருமணங்களே பதிவு செய்யப்பட்டது.
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிப்பவர்களுக்கு திருமணச்சான்று தேவை என்பதாலும், காதல் திருமணங்கள் செய்பவர்களும் அதிகளவில் திருமணங்களை பதிவு செய்த நிலையில், மற்றவர்கள் குறைந்த அளவிலேயே பதிவு செய்தனர்.
இதற்கு தமிழக அரசு ஆய்வு செய்த நிலையில், சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் திருமண பதிவிற்கு 200ரூ கட்டணமாக உள்ள நிலையில் 10000 ரூ வரை சில இடங்களில் கேட்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த சிரமங்களால் அதிகமானோர் திருமணங்களை பதிவு செய்ய ஆர்வம் காட்டாமல் வந்தது தெரிய வந்துள்ளது. எனவே இதனை சரிசெய்ய தமிழக அரசு ஒரு முயற்சியை கையிலெடுத்துள்ளது.
அதாவது திருமணம் செய்வோர் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல், வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக திருமண சான்றிதழும் கிடைக்கும் வகையில் இது வழிவகுக்கும்.
அதே நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள்தான் பின்பற்றப்படும். தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் இந்த ஆன்லைன் முறை பொருந்தும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பத்திரப் பதிவுத்துறையில் ஸ்டார்-2 சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் ஸ்டார்-3 ஆக மேம்படுத்தப்படும். இதற்குப்பிறகு ஆன்லைனில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.