ENG அணிக்கு 22 போட்டிகள்.. SA-க்கு 12 போட்டிகள்.. WTC பைனல் தகுதி குறித்து எழுந்த விமர்சனம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது நெருங்கியுள்ளது. இரண்டு அணிகள் டெஸ்ட் மேஸ்ஸுக்கு இறுதிப்போட்டியில் போட்டியிடும் நிலையில், முதல் அணியாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்த சூழலில் இரண்டாவது அணி எது என்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அதிகப்படியான போட்டிகளில் விளையாடி இறுதிப்போட்டிக்கு போராடிய நிலையில், குறைவான போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது சரிதானா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து 22 போட்டிகளும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 19 போட்டிகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு மட்டும் 12 போட்டிகளே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
கெவின் பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக பதிவு..
ஒரே இறுதிப்போட்டி கொண்ட தொடரில் ஒரு அணிக்கு 22 போட்டிகளும், மற்றொரு அணிக்கு 12 போட்டிகளும் என்ற மிகப்பெரிய வித்தியாசமானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தென்னாப்பிரிக்கா அணி ஒன்றும் WTC செல்வதற்கான அட்டவணையை உருவாக்கவில்லை, அதனால் அவர்களை குற்றம் சொல்வது நியாயமானது இல்லை. அவர்கள் கொடுக்கப்பட்டதை விளையாடினார்கள், அட்டவணையில் மட்டுமே பிரச்னை, அதை ஐசிசி தலைவர் ஜெய்ஷா சரிசெய்வார் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.