Ranipet  web
தமிழ்நாடு

தமிழ்நாடு தேர்தல் 2026 |ராணிப்பேட்டையில் யார் கை ஓங்கும்..? யாருக்கு வாய்ப்பு அதிகம்..?

ராணிப்பேட்டை 4 தொகுதிகளில் 2 திமுக வசமும், காங்கிரஸ் மற்றும் அதிமுகவிடம் தலா 1 தொகுதியும் இருக்கிறது. புதிதாக களமிறங்கி இருக்கும் விஜயின் தவெக மற்றும் பலமுறை களம் கண்ட நாம் தமிழர் கட்சியும் போட்டியில் இருக்கின்றனர்.

PT WEB

ஆற்காடு பிரியாணி, மக்கன் பேடா இனிப்பு, தோல் ஏற்றுமதி, BHEL, சிப்காட் தொழிற்சாலைகள் என தொழில்–சுவை கலந்த ராணிப்பேட்டை, ஆன்மீகம் மற்றும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் மாவட்டமாக திகழ்கிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய நான்கு தொகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் வன்னியர், முதலியார், நாயுடு, ரெட்டி, ஆதிதிராவிடர் வாக்குகளை நம்பி ஆட்சிப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

ஆற்காடு பிரியாணி மற்றும் 'மக்கன் பேடா' இனிப்பின் சுவை உலகறிந்த ஒன்று. ஒருபுறம் சுவை என்றால், மறுபுறம் உலக நாடுகளுக்குத் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 'பெல்' (BHEL) மற்றும் சிப்காட் தொழிற்சாலைகளின் உழைப்பு, இம்மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ளது. ஆன்மீகம், அதிகாரம், தொழில் எனத் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாகத் திகழும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

textiles minister R Gandhi

தற்போதைய நிலவரப்படி, இதில் திமுக 2 இடங்களிலும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் பலம் பெற்றுள்ளன.

ராணிப்பேட்டை தொகுதி: ராணிப்பேட்டை தொகுதியில் திமுகவின் மூத்த நிர்வாகி ஆர். காந்தி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இத்தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன் இத்தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியர் சமூகம் 50% இருந்தாலும், நாயுடு மற்றும் முதலியார் சமூகத்தினரே இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

சோளிங்கர் தொகுதி: சுமார் 2.56 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம். முனிரத்தினம் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இத்தொகுதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வன்னியர்கள் வசிக்கும் சூழலில், முதலியார் மற்றும் ரெட்டி சமூகத்தினரும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

அரக்கோணம் தொகுதி: 2.28 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அரக்கோணம் தொகுதியில் அதிமுகவின் சு. ரவி தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இங்கு மொத்த வாக்காளர்களில் வன்னியர் வாக்குகள் சரிபாதியாக உள்ளன. ஆதிதிராவிடர் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன

ஆற்காடு தொகுதி: 2.43 லட்சம் வாக்காளர்களைக்கொண்ட ஆற்காடு தொகுதியில் திமுகவின் ஈஸ்வரப்பன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். வன்னியர் சமூகம் 55 விழுக்காடாக இருந்தாலும், முதலியார் மற்றும் துளுவ வேளாளர் சமூகத்தினரின் வாக்குகள் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.