துணை ராணுவப்படையினர் Pt web
தமிழ்நாடு

#TNElection2026 | சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் காவல்துறையினர்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் 1 மணி நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், 18,000 துணை ராணுவப் படையினர் மற்றும் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

PT WEB

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், 4,023 வேட்பாளர்கள் இத்தேர்தலை சந்தித்திருக்கின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதிலும், தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கின்றனர். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

தலைமைச் செயலகம்

தமிழகத்தில் மொத்தமாக 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 4.88 கோடி வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கின்றனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.35 கோடி பேர். பெண் வாக்காளர்கள் 2.56 கோடி பேர் அடங்குவர். தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, 85.15 சதவீத வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாகியிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை இடையே நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான திமுக வெற்றி பெறும் எனத் தெரிவித்திருக்கின்றன. எனினும், அதிமுக வெற்றி பெறும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய வரவால், இந்தத் தேர்தல் தமிழக மக்களிடையே கடந்த தேர்தலைவிட பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தான், தமிழகத்தின் அரியணையில் யார் ஏறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

அதேபோல, வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணிகளில் 18 துணை ராணுவப்படையினருடன் சேர்த்து 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார். அனைத்து ஐஜி-க்கள், டிஐஜி-க்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.