ECI Announces Repolling on West Bengal Assembly
votersx page

மேற்கு வங்கம் | ஒரு தொகுதிக்கு மீண்டும் வாக்குப்பதிவு..

ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும், ஆட்சியைப் பிடிக்கப் போராடும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Published on

மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் மட்டும் மே 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு மே 24 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புதிய வாக்குப்பதிவு நேற்று (மே 2) நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த மறுவாக்குப்பதிவில் 90 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததால் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மீண்டும் மறுதேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஃபால்டா தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொத்தான்கள் டேப் கொண்டு மறைக்கப்பட்டதாகவும், வாக்குச்சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் பல்வேறு தரப்பினர் புகார் அளித்த நிலையில் அதில் மொத்தம் உள்ள 285 வாக்குச்சாவடிகளிலும் மே 21ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டு 24ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

west bengal assembly election 2026 phase 2 voting updates
west bengalPTI

அதேநேரத்தில், மீதமுள்ள 293 தொகுதிகளுக்கும் நாளை வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு, 148 இடங்கள் என்கிற நிலையில், அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கும், ஆட்சியைப் பிடிக்கப் போராடும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com