இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும், இதற்கான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதையடுத்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த சூழலில்தான், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான பணிகள் நாடு முழுவதும் இருகட்டங்களாக நடத்தப்படும் எனவும் இதற்கான முதல்கட்ட பணிகள் 2026ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில்தான், நாடு முழுவதும் முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான பணிகள் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறவுள்ளன. வரலாற்றில் முதன்முறையாக, இந்த முறை கணக்கெடுப்புப் பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது. மேலும், இப்பணிகளில் 32 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதேசமயம், பொதுமக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளுக்கான 4 டிஜிட்டல் தளங்களை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். அத்துடன் கணக்கெடுப்புக்கான பிரகதி (பெண்), விகாஸ் (ஆண்) என்ற பிரசார உருவங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஜூலை 17-இல் தொடங்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஆகஸ்ட் 30 வரை 45 நாட்களுக்கு நடைபெறும் எனவும், இதில், வீட்டு வசதி, வீடுகள் எண்ணிக்கை, கழிப்பறை வசதி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டிஜிட்டல் தளங்களில் தாங்களாவே தங்களது விவரங்களை உள்ளீடு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் வெளியிட்டுள்ளார்.
அதேபோல, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி நடைபெறவிருக்கிறது.
தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பின் 2ஆம்கட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கிறது. இதில், சமூக நிலை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படவுள்ளன. அதன்படி, 1931ஆம் ஆண்டுக்கு பிறகு சாதிரீதியிலான கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2011 -ஆம் ஆண்டில் சமூகப் பொருளாதாரரீதியில் கணக்கீடு நடத்தப்பட்டிருந்தாலும், இதற்கான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலில்தான், இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு இந்த மக்கள்தொகைக் கணக்கீடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.