செய்தியாளர்: ஆஜாஷெரீப்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், மாரியம்மாள், அம்சவேணி, சகுந்தலா, துரைராஜ், புஷ்பராஜ், வளர்மதி ஆகியோர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு முன்பக்கம் பூட்டி இருந்த 7 வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை இருந்த தங்க நகைகள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதில் மாரியம்மாள் என்பவரின் வீட்டில் 9சவரன் தங்க நகைகள், செல்வகுமார் என்பவரின் வீட்டில் 6 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம், அம்சவேணி என்பவரின் வீட்டில் 3 சவரன் தங்க நகைகள், 80 ஆயிரம் ரூபாய் பணம், துரைராஜ் என்பவரின் வீட்டில் 1 சவரன் தங்க நகை, புஷ்பராஜ் வீட்டில் 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட 19 சவரன் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த தௌ;ளார் காவல் நிலைய போலீசார் சம்பவம் இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நல்லூர் கிராம பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.