திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கே.வி குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் கூடுதல் டிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதை நேற்றய முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் கண்டறிந்தது. பொறுப்புகளை உணர்ந்து பணியில் செயல்பட வேண்டும் என பிரமாணம் ஏற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவரே கடத்தலுக்கு உதவி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கூடுதல் டிஜிபியை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினரால் கூடுதல் டிஜிபி கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தரப்பினர் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற கோடைகால அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தான் எதிர்மனுதாரராக கூட இல்லாத நிலையில் தனக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு சம்பந்தம் இல்லை என வாதிட்டார்.
வாதத்தையேற்ற நீதிபதி வழக்கில் தமிழக காவல்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்தார். மேலும் மூத்த காவல்துறை அதிகாரியாக ஜெயராமன் உள்ள நிலையில் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கியுள்ளார். எனவே அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் , கூடுதல் டிஜிபி ஜெயராமன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை தமிழக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
இதையடுத்து விளக்கத்தை நாளைய தினமே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, 28 ஆண்டு காலம் தமிழக காவல்துறையில் மூத்த அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவ்விவகாரத்தில் வழக்கிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும் இது போன்ற நடவடிக்கைகள் ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயராமன் பணியிடை நீக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பான உரிய விளக்கத்தை நாளை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.