Supreme court pt desk
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்! அரசுப் பணி ரத்துக்கு தடை உயர் நீதிமன்றம் அதிரடி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

PT WEB

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரப்புரை நடைபெற்ற இடத்திற்கு முதலமைச்சர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்று ஒரு தரப்பினரும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்தான் விபத்து ஏற்பட்டதாக மற்றொரு தரப்பினரும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Vijay's rally in Karur.

அதன்படி, கடந்த ஜூலை 10-ஆம் தேதி, உயிரிழந்த 41 பேரில் 31 பேருக்கு அரசுப் பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கியிருந்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் சூழலில், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், அரசு பணி வழங்கிய ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பிலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கக் கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார்? அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினர்.

விஜய்

மேலும், இதுபோன்ற விவகாரங்களில் எவ்வாறு அரசு பணி வழங்க வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில், தமிழக மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர