அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம், டாஸ்மாக் pt web
தமிழ்நாடு

டாஸ்மாக் சோதனைக்கு இடைக்காலத் தடை.. அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

PT WEB

தமிழ்நாடு டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என கூறப்பட்டு வந்த நிலையில், இதையடுத்து, தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

அமலாக்கத்துறை, டாஸ்மாக்

இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கதத் துறை சோதனை நடத்திய விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடிய தமிழக அரசு, இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், ஓர் அதிகாரி செய்த தவறுக்காக ஓர் அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கோப்புகளைப் பறிமுதல் செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது.

ஊழியர்கள் 40 மணி நேரம் அடைத்துவைத்து, தனிப்பட்ட தரவுகளைப் பறித்தது உரிமை மீறல் என்றும் குற்றஞ்சாட்டியது. இதற்கு அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் மிகப்பெரிய சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், மண்டல அளவில் லஞ்சம் பெற்று பணியமர்த்தல், எம்.ஆர்.பி.யைவிட அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் உள்ளதாலேயே சோதனை நடத்தப்பட்டதாகவும் பதிலளித்தது.

உச்சநீதிமன்றம்

அப்போது தலைமை நீதிபதி, ”சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அமலாக்கத் துறைக்குக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், ”கூட்டாட்சித் தத்துவத்தை ஏன் மீறுகிறீர்கள், சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது" என்றும் வினவினார். மூன்று நாட்களாக ஊழியர்களை அடைத்து வைத்ததாகக் கூறப்படுவது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்த விவகாரத்தை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் தொடர்பான மறு ஆய்வு வழக்குகளுக்கு பிறகு விசாரிப்பதாகவும் அறிவித்துள்ளது.