டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் வழக்குpt

டாஸ்மாக் வழக்கு| ’இதுக்கு மட்டும் கூட்டாட்சி தத்துவமா..?’ தமிழக அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, சட்ட விரோதம் இல்லை எனக்கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
Published on

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

25-க்கும் மேற்பட்ட இடத்தில் அமலாக்கத்துறை சோதனை!

டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மதுகொள்முதல் செய்யும் ஆலைகள், மதுவிற்பனை நிறுவனங்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி சோதனை நடத்தினர். 

இந்த சூழலில், அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசு வழக்கு
தொடர்ந்தது. 

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனைpt web

விசாரணையின் போது, சோதனை நடத்தப்பட்ட போது பெண் அதிகாரிகள் உட்பட பலர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. அதேநேரம் டாஸ்மாக் முறைகேடு மூலம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக
அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

நீதிமன்றம் அதிருப்தி..

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் எஸ்.எம்.
சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல்கள் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, டாஸ்மாக் அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி
கையெழுத்து வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அது அவர்களின் கடமை எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்முகநூல்

அமலாக்கத் துறை விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க அரசு முயல்வது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளனர்.

சோதனைக்கு அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது எனக் கூறிய நீதிபதிகள், கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றும், கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த
வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்த கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டதாகவும், அரசியல் உள்நோக்கம் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com