கரூர் கூட்டநெரிசல் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழு தலைமையில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அதனை எதிர்த்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி தவெக மட்டுமில்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்திலிருந்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.
சிபிஐ விசாரணைக் கோரிய 5 மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா
தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பிலும், உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பிலும் சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றும், அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணைத் தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் வைக்கப்பட்டது.
இரண்டு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், உடற்கூராய்வு செய்வதற்கு எத்தனை ஸ்லேப்கள் பயன்படுத்தப்பட்டது என்றும், மதுரைக்கிளையில் வழக்கு இருக்கும்போது சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு ஏன் புலனாய்வுக்குழுவை நியமித்தது என்றும் கேள்வி எழுப்பியது. மேலும் அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் எழுத்துப்பூர்வ ஆவணம் சமர்பிக்கவேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய தவெக தரப்பு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட புலனாய்வுக் குழுவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும், அவருடன் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கரூர் சம்பவம் தொடர்பாக மதுரைக்கிளை விசாரிக்கும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவெக தரப்பில் அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட எங்களிடம் கேட்காமல் தொடரப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வத்தின் மனைவி காணொளி மூலம் ஆஜராகி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதைச்சார்ந்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.