முதல்வர், நீதிபதி குறித்து அவதூறு பதிவு.. தவெக நிர்வாகிக்கு 24-ம் தேதி வரை சிறை!
தமிழக முதல்வர் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி குறித்தும் விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக திமுக நிர்வாகி புகாரின் பேரில், த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் திண்டுக்கல் சாணார்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிராக காவல் நிலையம் முன்பு த.வெ.க நிர்வாகிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சிலரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அனுப்பினர்.
பின்னர், ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி, நிர்மல் குமாரை அக்டோபர் 24ஆம் தேதி வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு எதிராக கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.