பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு முகநூல்
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம் |வெளியூர் வியாபாரிகளிடமிருந்து பத்திர பதிவு... - சுப்ரமணியன்!

வெளியூர் வியாபாரிகளை அழைத்து வந்து பத்திர பதிவு செய்கிறார்கள் என விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைவர் சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார் .

ஜெனிட்டா ரோஸ்லின்

தங்கள் பகுதியில் நிலம் வாங்கி முதலீடு செய்துள்ள வெளியூர்க்காரர்கள்தான், பரந்தூர் விமான நிலையம் கட்டுவதற்காக நிலத்தை கொடுக்க முன்வந்திருப்பதாக, விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்காக, சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தியும் , பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 1019 நாள்கள் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பசுமை விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் சிலர், தங்கள் நிலத்தை அரசிடம் அளித்து வருகின்றனர். ஆனால், அரசிடம் நிலங்களை கொடுத்து வருவது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று, விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அக்குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ள தகவலில், “ பரந்தூரில் நிலம் வாங்கிய வெளியூர் வியாபாரிகளை அழைத்து வந்து பத்திரபதிவு செய்கின்றனர். போராடும் விவசாயிகளை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து எங்கள் குழுவில் ஆலோசனை நடத்தி விரைவில் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம்.” என்று தகவல் அளித்துள்ளார்.