பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப்பெற்ற விவரங்களை கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது. இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்தக் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியது. தமிழர்களின் தொன்மையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இவ்விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், “கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். தொல்லியில் துறையில் அரசியல்வாதிகள் ஏதும் முடிவு செய்ய முடியாது. இதில் தொல்லியல் நிபுணர்கள் தான் முடிவு செய்ய முடியும். இது அவர்களின் வேலை” எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன், “ ‘இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்னபோது ’அறிவியல் ஆதாரம் என்ன’ என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால், அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. ’அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் தேவை. அப்போதுதான் அங்கீகரிக்க முடியும்’ என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு மூத்திரம் இப்போது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு, “வரலாறும் அது கூறும் உண்மையும், மலிவான் அரசியலுக்காகக் காத்திருக்காது. பூனைக் கண்ணை மூடிக்கொண்டு விட்டால், உலகம் இருண்டுவிடுமா என்ன? ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.