ASI Vs அமர்நாத் | கீழடி விவகாரத்தில் தொடரும் கருத்து வேற்றுமைகள்.. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை!
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்கும் நிலையில், சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மறுப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து சில ஊடகங்களில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மறுப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள கருத்து என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி திட்டத்துக்கு தலைமை தாங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையில் மாற்றங்கள் செய்ய வழங்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்கவில்லை. வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ள மாற்றங்கள் தேவை இல்லை என அவர் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு விரிவாக கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும் என கலாசாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
"கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன," என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை என அமர்நாத் ராமகிருஷ்ணா பெயரை குறிப்பிடாமல் கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் முற்றிலும் கடுமையாக மறுக்கப்படுகிறது எனவும் இந்திய தொல்பொருள் ஆய்வுநிறுவனம் தெரிவித்துள்ளது. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன், “வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல.! “திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்று தான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார். பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது.” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் கீழடி அறிக்கை விவகாரம் தொடர்ந்து வருகிறது.