தவெக பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு PT News
தமிழ்நாடு

தவெக-வின் மதுரை மாநாட்டுக்கு பேனர் கட்டியபோது நேரிட்ட சோகம்.. மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

மதுரை அருகே நடந்த தவெக மாநாட்டிற்காக பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தவெகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vaijayanthi S

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, த.வெ.க.வின் மதுரை மாநாட்டுக்காக பேனர் கட்டியபோது, கல்லூரி மாணவர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தயாராகி வருகிறது. முதல் மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலைமோதியதால் ஏற்பட்ட சில சவால்களை, இந்த முறை கடந்துவிட வேண்டும் என்பதற்காக, மாநாட்டு ஏற்பாடு பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. விக்கிரவாண்டி வி.சாலையில் 120 ஏக்கரில் விஜயின் முதல் மாநாடு நடந்தது. இந்த முறை மதுரையில் நடைபெறும் 2ஆவது மாநாட்டுக்கான திடல், 250 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தவெக பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு

இந்த மாநாட்டிற்காக மதுரையை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை தவெக மாநாட்டுக்காக இனாம் கரிசல் குளத்தில் பேனர்கள் கட்டும் பணியில் கட்சியினர் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் கல்லூரி மாணவர் காளீஸ்வரனும் அதில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அவர் எடுத்து வந்த நீளமான இரும்புக் கம்பி, அங்கு இருந்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி, அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார்.