சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த தமிழக முதல்வர் ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களை திறந்து வைத்துள்ளார். அதன்படி, இன்று காலை கானடிகாத்தானில் கட்டப்பட்டுள்ள வேளாண்கல்லூரியைத் தொடங்கி வைத்த அவர், அதனைத் தொடர்ந்து, கழனிவாசல் பகுதியில் அரசு சட்டக்கல்லூரியையும், அக்கல்லூரியின் அருகே, 32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் திறந்து வைத்துள்ளார்.
தொடர்ந்து, காரைக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் பெருமையை எடுத்துக் காட்டும் கீழடி உள்ள சிவகங்கை, விடுதலை தியாகத்தின் எடுத்துக்காட்டான வேலு நாச்சியார், குயிலி பிறந்த மண் எனவும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், திராவிட மாடல் அரசு எண்ணற்ற ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அடுத்தும் நமது திராவிட மாடல் ஆட்சிதான். அதில் சந்தேகமே இல்லை எனவும் தற்போது, அடிக்கல் நாட்டிய திட்டங்களை மீண்டும் ஆட்சிக்கு வந்து நானே திறந்து வைப்பேன் எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் தேர்தலுக்காக பல ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எனத் தெரிவித்த அவர், திமுக அரசின் திட்டங்களை ஒன்றிய அரசே பாராட்டியுள்ளது. எனவே, எதனையும் தெரிந்து கொண்டு ஆளுனர் பேச வேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும், ”மக்கள் நன்றாக இருப்பது ஒன்றிய அரசுக்கு பிடிக்காது. 50 நாள் கூட ஊரக வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. முன்பு, ஊரக வேலைத் திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடியில் இருந்து 15 ஆயிரம் கோடி வரை மாத ஊதியம் கொடுக்கப்பட்டது. இனி அது சந்தேகமே மீண்டும் அத்திட்டத்தை மக்களின் துணையோடு கொண்டு வருவோம்” எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் எந்த வாக்குறுதியையும் அது நிறைவேற்றவில்லை என்றும், நாங்கள் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளோம் எனத் தெரிவித்த அவர், உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், இன்னும் பல கனவு திட்டம் உள்ளது. அதனை நிறைவேற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,