தைலாபுரம் | பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட நேர்காணல்.. ராமதாஸ் தலைமையில் இன்று தொடங்கியது!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக கடந்த 1 வருடங்களாகவே அன்புமணி தரப்பு மற்றும் ராமதாஸ் தரப்பு என இரு தரப்புகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் அன்புமணி தரப்பு பாமக, அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருப்பதாக அறிவித்துவிட்டது. ஆனால், ராமதாஸ் தரப்பு பாமக இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் இன்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிலிருந்து சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்பமனு கடந்த ஜனவரி 9 முதல் 14 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில், 4109 மனுக்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி கே மணி, செயல் தலைவர் காந்திமதி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த நேற்காணலில் முதல் நாளான இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சார்ந்தவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
நாளை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கரூர், புதுச்சேரி சார்ந்தவர்களுக்கும் நாளை மறுநாள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை சார்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்ப மனுவிற்கான நேர்காணலில் அந்தந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
