காவிரி நீர் தொடர்பான பிரச்னை தமிழ்நாடு - கர்நாடக இடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனிடையே, சமீபத்தில் டெல்லி காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் கூட்டம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறைவான மழைப்பொழிவு காரணமாக தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறி வரும் நிலையில், இன்னும் கர்நாடக அரசு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. இந்தசூழலில் தான், மேகதாது விவகாரம் மற்றும் காவிர் நீர் திறப்பு குறித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய் கர்நாடக செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரின் பயணத்துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
எனினும், நேற்றைய தினம் முதல்வர் விஜயுடன் செல்லக்கூடிய 13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டது. ஆனால், பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், “பதற்றமான சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது?; வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம்; உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்” எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக செல்லவிருந்த முதல்வர் விஜய் பயணம் ரத்தாகியிருக்கிறது.
இந்தசூழலில் தான், தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர் விஜய் எனவும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? எனவும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். தமிழ்நாடு முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.