ஆதவ் அர்ஜுனா - முக ஸ்டாலின் pt
தமிழ்நாடு

ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி ஸ்டாலின் - ஆதவ் அர்ஜுனா

ஜனநாயக படுகொலையின் முதல் குற்றவாளி ஸ்டாலின்; உரிய நேரத்தில், எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக செய்த சதிவேலைகளை ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Premkumar S

எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், 2025-ம் ஆண்டு முதல் கட்டமாக பிகாரில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2-வது கட்டமாகவும், விடுபட்ட மாநிலங்களுக்கு 3-வது மற்றும் கடைசி கட்டமாக எஸ்.ஐ.ஆர் பணிகளை முடித்திருக்கிறது. இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர் பணிகளை தொடங்கியதில் இருந்தே, பாஜக எதிரான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ஞானேஷ் குமார்

இந்தச்சூழலில் தான், எஸ்.ஐ.ஆர். பணிகளின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையர்கள் இருவர் அளித்த குற்றச்சாட்டையடுத்து, எஸ்.ஐ.ஆர் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் எனவும், ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனவும் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றனர். இதற்கிடையில், தமிழ்நாட்டில் தவெகவிடம் ஆட்சியை இழந்திருக்கும் திமுகவினர், எஸ்.ஐ.ஆர் காரணமாகவே தாங்கள் தோல்வியைச் சந்தித்தாக கோரி வருகின்றனர். இந்தச்சூழலில் தான், பொதுபணித்துறை அமைச்சரும், தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா. எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக செய்த சதிவேலைகளை ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் டிராமாக்களை திமுக அரங்கேற்றி வருவதாகவும், அதுபோலவே தற்போது, தி.மு.க, 'எஸ்.ஐ.ஆர் டிராமா'-வை புதிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது எனவும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்து, தி.மு.க-வின் செயல்பாடுகளை கவனித்தவர்களால் தி.மு.க-வின் திருட்டு 'டிராமா'-வை எளிதாகவே புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்ட திமுகவின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டில் எஸ்.ஆர். பணிகள் நடைபெற்றது. அதாவது, இந்தப் பணிகள் ஒன்றிய பாஜக அரசில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீதியிலும்... ஒவ்வொரு தெருவிலும்... ஒவ்வொரு சந்துகளிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியது திமுக தான். எந்த வாக்குச்சாவடிக்கு எந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் திமுக கிளை மற்றும் மாவட்ட செயலாளர்களே முடிவு செய்தனர் எனவும் அறிக்கையில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

தொடர்ந்து, "உங்கள் வாக்குகள் பறிபோகாது. தி.மு.க முகவர்கள் உங்கள் வீடுகளுக்கே வந்து உங்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வார்கள்" என்று திமுக தலைவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் அவர்களும் இதைப் பெருமையாகப் பேசினார். அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களே, "எஸ்.ஐ.ஆர் வேலைகளை தேர்தல் ஆணையத்திற்காக தி.மு.க தான் செய்கிறது. திமுக கட்டுப்பாட்டில்தான் எஸ்.ஐ.ஆர் வேலைகள் நடக்கின்றன" என்று குற்றம்சாட்டினார் எனவும் அதேசமயம், அப்போதே தமிழக வெற்றிக் கழகம் எதிர்த்ததாகவும், ஆனால், தவெகவிற்கு வாக்களிக்க வாய்ப்புள்ள இளைய தலைமுறையினர் வாக்குகளை திமுக மேற்பார்வையில் தேர்தல் ஆணையம் நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர் காரணமாகவே தவெக வெறும் 108 இடங்களை வென்றதாகவும், இல்லையென்றால் 160 இடங்களில் வென்றிருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படி, இந்தியாவின் தனித்துவமான ஜனநாயகத்தைப் படுகொலை செய்த பழியில் பங்கேற்றுவிட்டு, இன்றைக்கு முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எனவும் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பழியில் பங்கெடுத்த தி.மு.க-வை மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்; இனியும் அப்புறப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, உரிய நேரத்தில், எஸ்ஐஆர் பணிகளில் தி.மு.க செய்த சதிவேலைகளை முழுமையாக ஆதரங்களுடன் அம்பலப்படுத்துவோம் எனவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஜனநாயகத்திற்கு எதிராக, விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் எஸ்ஐஆர் - ஐ எதிர்க்கும். முழுமையாக தமிழ்நாட்டு வாக்காளர்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.