தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 59 இடங்களை மட்டுமே வென்றிருப்பதுடன், அக்கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட சென்னை மாவட்டத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்து இருக்கிறது திமுக. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல, எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் இத்தேர்தலில், 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதேசமயம், 4 அதிமுக எம்.எல்.ஏ-கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-கள் பலம் 43-ஆக குறைந்திருக்கிறது. எனினும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான கே. பழனிசாமி, தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில், 98,110 வாக்குகள் அதிகம் பெற்று, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்தசூழலில் தான், எடப்பாடி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், உரையாற்றிய அவர், அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் குறித்துப் பேசுகையில், ”அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏக்களை குதிரைபேரம் பேசி ராஜினாமா செய்து உள்ளார்கள். அந்த 4 பேரை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இரவும், பகலுமாக உழைத்து வெற்றி பெற வைத்தார்கள். விரலில் இருக்கும் மை கூட அழியவில்லை; வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும் துரோகம் செய்து விட்டீர்கள். உங்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக குறித்து பேசுகையில், "ஆளுங்கட்சியின் 2 கால்கள் எப்போது வேண்டுமானாலும் உடையும்; நாற்காலி கவிழும். விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரைதான் தவெக ஆட்சி. ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது ஏன்?; இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள்; அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக குறித்து பேசிய அவர், ”ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது திமுக தலைவர் ஸ்டாலின், 10 தேர்தல்களில் தோல்வி கண்ட பழனிசாமி என அடிக்கடி கூறினார். ஆனால், இப்போது அவரே தோற்றுவிட்டார். ஆட்சி அதிகாரம் இருக்கும் போது பணிவு வரவேண்டும். தவெகவினரே அடக்கி வாசியுங்கள், இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலைமை வரும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் அதை புரிந்துகொண்டு தவெக அரசாங்கம் செயல்படவேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.